ஆவின்– மீனவர் கூட்டுறவு தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தளவாய்சுந்தரம் வெளியிட்டார்


ஆவின்– மீனவர் கூட்டுறவு தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தளவாய்சுந்தரம் வெளியிட்டார்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஆவின் மற்றும் மீனவர் கூட்டுறவு தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் வெளியிட்டார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்தபடியாக மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியலை வெளியிடுகிறேன். அதன்படி குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கான (ஆவின்) தேர்தலில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான எஸ்.ஏ.அசோகன் போட்டியிடுகிறார். ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை சங்க தேர்தலில் சகாயராஜ் போட்டியிடுகிறார்.

மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தேர்தலில் மாவட்ட மீனவர் அணி இணை செயலாளர் திமிர்த்தியூஸ் போட்டியிடுகிறார். ஆனால் கட்சிக்கு சம்பந்தமில்லாமல், கட்சியை விட்டு நீக்கப்பட்ட சகாயம் என்ற அய்யப்பன் அ.தி.மு.க. வேட்பாளர் இல்லை. அவர் இன்னும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவர் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். அதன்பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை. எனவே மீனவர் கூட்டுறவு இணையத்துக்கான தேர்தலில் திமிர்த்தியூஸ் போட்டியிடுகிறார். தோவாளை– அகஸ்தீஸ்வரம் தாலுகா வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் கிருஷ்ணதாஸ் போட்டியிடுகிறார்.

அருமனையில் உள்ள குமரி மாவட்ட ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் போட்டியிடுகிறார். கல்குளம் விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் முன்னாள் மாவட்ட பொருளாளர் நாஞ்சில் டொமினிக் போட்டியிடுகிறார். நெசவாளர் கூட்டுறவு இணையத்துக்கான தேர்தலில் முன்னாள் தொகுதி செயலாளர் அம்சி மோகன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6–ந் தேதி நடைபெறுகிறது. 11–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்ற கட்சி தலைமையின் உத்தரவை மனதில் கொண்டு கூட்டுறவு சங்க தலைவர்களும், உறுப்பினர்களும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் எந்தவித செயலிலும் ஈடுபட கூடாது. அப்படி ஈடுபடுபவர்கள் மீது தலைமை கழக நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.

பேட்டியின்போது குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு), அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இலக்கிய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், நகர இலக்கிய அணி செயலாளர் கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story