திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கற்பழிப்பு; தனியார் நிறுவன ஊழியர் கைது


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கற்பழிப்பு; தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கற்பழித்ததாக கோவை தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பொட்டயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சூரியகிருஷ்ணன் (வயது 23). கோவை இருகூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது, அப்போது அதே கல்லூரியில் படிக்கும் 21 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில் சூரியகிருஷ்ணன் கல்லூரி படிப்பு முடிந்ததும் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். தற்போது அந்த மாணவி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் அந்த மாணவி காதலன் சூரியகிருஷ்ணனை பார்க்க அடிக்கடி கோவைக்கு சென்று வந்தார்.

அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து திருமணம் செய்ய கோரி அந்த மாணவி வற்புறுத்தியதற்கு, தனது சகோதரி திருமணத்திற்கு பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சூரியகிருஷ்ணன் கூறி உள்ளார். மேலும் அவர், மாணவியை சந்திப்பதை தட்டிக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சூரிய கிருஷ்ணன் தன்னை ஏமாற்றி விட்டதை புரிந்து கொண்டார்.

இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சூரியகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கைதான சூரியகிருஷ்ணனை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story