உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தரையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்


உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தரையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:15 AM IST (Updated: 29 Sept 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தரையில் படுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து வேலூர் மாவட்டம் திருவலம் வரை 800 கிலோவாட் உயர்மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருவண்ணாமலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வயர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயர் மின்கோபுரங்கள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிக்கு திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு அருகில் உள்ள குண்ணுமுறிஞ்சை பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு பணியில் ஈடுபட்டு வந்தவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பணிக்கு தடை விதித்தும், இதுவரை ஏற்படுத்திய சேதங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தால் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்காதவகையில் ஓடை புறம்போக்கு வழியாகவோ அல்லது சாலை ஓரங்களில் கேபிள் அமைத்து செல்லவோ உத்தரவிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து அவர்களை சமரசம் செய்ய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அந்த மின்கோபுரத்தின் அருகில் தரையில் படுத்துக் கொண்டு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அல்லது எங்களை கைது செய்யுங்கள் என்று ஆவேசமாக கூறினர்.

அவர்களிடம் போலீசார், நீங்கள் கலெக்டரிடம், கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். போராட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





Next Story