கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்


கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 28 Sep 2018 11:53 PM GMT (Updated: 28 Sep 2018 11:53 PM GMT)

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் வீடு, வீடாக சென்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் வடசேரி பிரம்மகுமாரி அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதை நிறைவேற்றும் வகையில் பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து தெருக்களை சுத்தம் செய்தும், மரக்கன்றுகளை நட்டும் வருகிறார். இந்த பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கும், இவரை போன்ற அதிகாரிகளுக்கும் தமிழக அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் தர்மலிங்க உடையார், கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.



Next Story