அவனியாபுரம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் சிக்கினர்
அவனியாபுரம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.
மதுரை,
மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக அரசு அலுவலகம், தனியார் தொழிற்சாலை, வீடுகள், அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் என பல்வேறு இடங்களில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களில் 15 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் ஒரு வழக்கில் கூட கொள்ளையர்கள் குறித்து எவ்வித தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு, ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டு இருந்தன. எனவே போலீசாருக்கு இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மிகவும் சிரமமாக இருந்தது.
இதற்கிடையில் அவனியாபுரம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனே பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் பீர்முகைதீன் அறிவுரையின் பேரில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் எஸ்தர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகை செல்வம், செல்வகுமார், போலீசார் கணேசன், பழனிக்குமார், சந்திரசேகர், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு நகை கடையில் கதவை உடைக்க முயன்று, அது அவர்களால் திறக்க முடியாமல் போனது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களாக தீவிர விசாரணை நடத்தி அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 15–க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவனியாபுரத்தை சேர்ந்த தங்கமூர்த்தி(வயது 26), பாலாஜி(20), விஜய்(20), மகாலிங்கம்(23) ஆகிய 4 பேருக்கு இந்த சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், அதில் விஜய், மகாலிங்கம் ஆகியோர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கணினி உபகரணங்கள், காப்பர் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.