போலீசாரை கண்டித்து தாயுடன் வாலிபர் உண்ணாவிரதம் - முத்துப்பேட்டையில் பரபரப்பு


போலீசாரை கண்டித்து தாயுடன் வாலிபர் உண்ணாவிரதம் - முத்துப்பேட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sep 2018 10:55 PM GMT (Updated: 29 Sep 2018 10:55 PM GMT)

முத்துப்பேட்டையில் தந்தையை கைது செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் தனது தாயுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் சூப் கடை நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு துரைராஜ் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். ராஜேந்திரனுக்கும், அவருடைய மகள் கோமதிக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வருகிறது.

நேற்று நடந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக கோமதி தெரிவித்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார், ராஜேந்திரனை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ், போலீசாரை கண்டித்து தனது கடை முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். இதில் அவருடைய தாய் தனலட்சுமியும் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதம் நடந்த இடத்தில் “கட்ட பஞ்சாயத்து பண்ணும் முத்துப்பேட்டை போலீசாரை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்” என்று எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட துரைராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ராஜேந்திரனை விடுவித்தனர். இந்த நிலையில் ராஜேந்திரனும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story