சூளகிரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


சூளகிரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2018 4:36 AM GMT (Updated: 30 Sep 2018 4:36 AM GMT)

சூளகிரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், மின்வாரிய மேற்பார்வையாளர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அதனால் உரக்கடைகளில் வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம், வேப்ப எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வேளாண்மைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி செயல்படும் கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள், பயிர்கள் மீது படர்ந்து சேதம் ஏற்படுகிறது.

சூளகிரி பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்வதால், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் பயிர் கடன்கள் வழங்க, அடங்கல் சான்றிதழ் கொண்டு வந்தால் தான் வழங்க முடியும் என்கின்றனர். அடங்கல் சான்றிதழ் என்பது பயிர் செய்த பின்பு, அலுவலர்கள் பயிர் இருப்பதை நேரில் ஆய்வு செய்து வழங்க கூடிய சான்றிதழ் ஆகும்.

இப்படி இருக்கும் போது இனிமேல் செய்ய கூடிய பயிருக்கு முன் கூட்டியே எப்படி அடங்கல் சான்றிதழ் வழங்க இயலும். எனவே, கடன் சிட்டாவை பெற்று கொண்டு முன்கூட்டியே பயிர்கடன் வழங்க வேண்டும். யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

தொடர்ந்து அவர்களுக்கு பதில் அளித்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- உரக்கடையில் இயற்கை உரங்கள் விற்பனை செய்ய பரிசீலனை செய்யப்படும். கல்குவாரிகள் அமைக்க விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்தால், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காதீர்கள். சூளகிரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அனைத்து விவசாயிகளும், நீர்நிலைகள், ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்.

நீர்நிலைகள் தொடர்பான மனுக்களை மட்டும் விசாரிக்க, அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் நீர்நிலைகள் தொடர்பாக மனு அளித்த விவசாயிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்று, சாத்தியக்கூறு உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். முன்னதாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story