லாரி உரிமையாளர் கொலை ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது


லாரி உரிமையாளர் கொலை ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 1 Oct 2018 5:00 AM IST (Updated: 1 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானர் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜகட் மாவட்டம் ராம்கட் கிராமத்தை சேர்ந்தவர் தவர்சிங் (வயது 44). லாரி உரிமையாளர். இவர் கடந்த 2000–ம் ஆண்டு மார்ச் மாதம் தனக்கு சொந்தமான லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்தார். லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவரான மங்குபாய் என்ற அப்துல் சலீம் (42) ஓட்டி வந்தார். பிரேம்சந்த் (22) கிளீனராக உடன் வந்தார்.

சென்னையில் வேலை முடிந்தவுடன் கும்மிடிப்பூண்டி வழியாக அந்த லாரி ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரெயில்வே கேட் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி, லாரி உரிமையாளர் உள்பட 3 பேரும் சாப்பாத்தி செய்து சாப்பிட்டனர்.

அப்போது டிரைவர் மங்குபாய், தனது மகளின் திருமண செலவிற்காக ரூ.5 ஆயிரத்தை, லாரி உரிமையாளரான தவர்சிங்கிடம் கேட்டார். இதனை அவர் தர மறுத்ததால் தவர்சிங்கை அடித்து கொலை செய்து அவரிடம் இருந்த ரூ.42 ஆயிரத்தை பறித்து கொண்டனர். பின்னர் தவர்சிங்கின் உடலை தீ வைத்து எரித்து விட்டு மேற்கண்ட லாரி டிரைவர் மங்குபாயும், கிளீனர் பிரேம்சந்தும் லாரியுடன் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி கிளீனரான பிரம்சந்த் என்பவரை மட்டும் ஏற்கனவே கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான லாரி டிரைவர் மங்குபாய் என்பவரை 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் ராஜஸ்தானில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட லாரி கிளீனர் பிரேம்சந்த் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தலைமறைவானார்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், சுரேஷ், சபாபதி, அப்துல் காதர் ஆகியோர் ராஜஸ்தானுக்கு நேரில் சென்று ஜாமீனில் வெளியே வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த லாரி கிளீனர் பிரேம்சந்த்தை ராஜஸ்தானில் நேற்று முன்தினம் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட பிரேம்சந்த், ரெயில் மூலம் தமிழ்நாட்டிற்கு இன்று அழைத்து வரப்படுகிறார். அவரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.


Next Story