ரூ.1 கோடி கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்


ரூ.1 கோடி கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:45 PM GMT (Updated: 1 Oct 2018 10:45 PM GMT)

ரூ.1 கோடி கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வேலூர்,

காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் டிஜோரமேஷ் (வயது 22). கல்லூரி மாணவரான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் மாணவரை அந்த கும்பல் விடுவித்தது. இதையடுத்து கடத்தப்பட்ட மாணவர் டிஜோரமேஷின் வீட்டில் கடந்த மாதம் 1-ந் தேதி மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். அதில் 4 மோட்டார்சைக்கிள்கள், வீட்டில் இருந்த ஏ.சி.மெஷின் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இந்த இரு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த விருதம்பட்டு போலீசார் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த பாலா என்கிற பலராமன் (23), கஞ்சாலூரைச் சேர்ந்த ரகீம் (21) உள்பட 4 பேரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் பிரபல ரவுடி ஜானியின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

மேலும், இதில் தொடர்புடைய பலரை விருதம்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர் கடத்தல் வழக்கு தொடர்பாக வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரை சேர்ந்த விக்னேஷ் (22), அரிபிரசாந் (23), ஆனந்த் (25) ஆகியோர் நேற்று மாஜிஸ்திரேட்டு வெற்றிமணி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 3 பேரையும் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story