ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கொலை செய்ய முயன்ற தந்தை கைது
மனவளர்ச்சி குன்றிய சிறுமையை கொலை செய்ய முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 38). இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சாதனா(வயது 8), மனவளர்ச்சி குன்றியவள். சிறுமியை வளர்க்க முடியாமல் கணவன், மனைவி மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த குழந்தையை கொலை செய்ய முனீஸ்வரன் முடிவு செய்தார்.
சம்பவத்தன்று இரவு குழந்தை, மனைவியுடன் நாகபாளையம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு பெற்ற குழந்தைக்கு முனீஸ்வரன் விஷத்தை கொடுத்தார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு கூடினார்கள். அப்போது அங்கு நடந்த சம்பவம் கேள்விபட்டு ஊர்மக்கள் அந்த குழந்தையை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்குடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொலை செய்ய முயன்றதாக வாழைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.