கல்லட்டி மலைப்பாதையில் 5 பேரை பலிவாங்கிய விபத்து நடந்தது எப்படி? போலீஸ் உயர் அதிகாரிகள் தகவல்


கல்லட்டி மலைப்பாதையில் 5 பேரை பலிவாங்கிய விபத்து நடந்தது எப்படி? போலீஸ் உயர் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் 5 பேரை பலிவாங்கிய விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி,

மலை மாவட்டமான நீலகிரியில், சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்புவது மசினகுடி, முதுமலை பகுதியைதான். அடர்ந்த வனப்பகுதியான இங்கு புலி, சிறுத்தைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அத்துடன் இந்த பகுதியில் இரவு நேரத்தில் தங்கினால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

எனவே தான் ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்கள் மசினகுடி, முதுமலை பகுதிக்கு செல்ல தவறுவது கிடையாது. இந்த பகுதிக்கு ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக சென்றால் 75 கி.மீ. தூரம் ஆகும். 3 மணி நேரம் செல்ல வேண்டும்.

ஆனால் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றால் 35 கி.மீ. தூரம்தான். 1½ மணி நேரத்தில் சென்று விடலாம். இதனால் பெரும்பாலான வாகனங்கள் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாகதான் சென்று வருகின்றன.

இந்த மலைப்பாதை மிகவும் செங்குத்தானது ஆகும். ஊட்டியிலிருந்து 36 கொண்டை ஊசி வளைவுகளுடன் செங்குத்தாக இறங்கும் இந்த பாதையில் கார்களில் செல்லும்போது முதல் மற்றும் 2–வது கியரில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் இந்த பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை. அத்துடன் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 1–ந் தேதி காலை 8.45 மணிக்கு விடுதியில் இருந்து ஜூடு அண்டோ கெவின், ராம ராஜேஷ், இப்ராகிம், அருண், ரவி வர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோர் சொகுசு காரில் சென்று உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட பதிவு எண் கொண்ட அந்த காரை ஜூட் ஆன்டோ கெவின் ஓட்டி உள்ளார்.

பொதுவாக காலை 9 மணிக்கு மேல்தான் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இவர்கள் 8.45 மணிக்கே சென்று விட்டதால் அங்கு போலீசார் இல்லை. இதனால் அவர்கள் எளிதாக அந்த மலைப்பாதையில் சென்று உள்ளனர்.

மேலும் இந்த பாதையில் 30 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் 3–வது கியரில் 60 கி.மீ. வேகத்துக்கும் மேல் சென்று உள்ளனர். இதுபோன்று சென்றால் சிறிது தூரம் மட்டுமே பிரேக் பிடிக்கும். பின்னர் பிரேக் பிடிக்காது. ஆனால் அவர்கள் 3–வது மற்றும் 4–வது கியரில் சென்று உள்ளதால் பிரேக் பிடிக்காமல் போய்விட்டது. இதன் விளைவு கார் மலைப்பாதை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழந்து விட்டது. 300 அடிக்கு கீழே விழுந்ததால் கார் நொறுங்கி போய்விட்டது. அது ஆள் அரவமற்ற இடம் என்பதால் அங்கு விபத்து நடந்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை.பலத்த காயம் அடைந்த அவர்கள் எழுப்பிய கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை.

நொறுங்கிய காருக்குள் சிக்கிக்கொண்டதால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பள்ளத்துக்குள் சுமார் இரண்டரை நாட்களுக்கு பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.மற்றவர்கள் சம்பவம் நடந்த சிலமணி நேரங்களில் இறந்து இருக்ககூடும் என்று தெரிகிறது.மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் மிட்பு பணியை எளிதாக செய்ய முடியவில்லை.மரக்கிளைகளை வெட்டி புதிய பாதை அமைத்து தான் உடல்கள் தூக்கி வரப்பட்டன.

மிகவும் ஆபத்தான இந்த மலைப்பாதையில் வெளிமாவட்ட, வெளிமாநில வாகனங்கள் செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் வெளியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்லாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story