போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சூப்பிரண்டிடம் மனைவி புகார்
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ரோந்துப் பணிக்கு சென்ற போலீஸ் ஏட்டு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக நிலைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காத நிலையில் அவரது மனைவி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் புருசோத்தமன் என்பவரின் மனைவி சாந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் நேரில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் கடந்த மாதம் 30–ந்தேதி இரவு போலீஸ் அதிகாரிகள் உத்தரவின்பேரில் பந்தல்குடி அக்ரகாரம் தெருவில் ரோந்து பணிக்கு சென்றார்.
அப்போது நான்கு பெண்கள் தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். எனது கணவர் அவர்களிடம் இரவு நேரத்தில் ஏன்? இங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்கள் வீட்டிற்குள் இருந்த ஆண்களை அழைத்துள்ளனர். குடிபோதையில் இருந்த 3 பேர் வெளியே வந்து எனது கணவரை போலீஸ் என்றும் பாராமல் அடித்து படுகாயப்படுத்தி உள்ளனர். மேலும் அவரது கையில் இருந்த பையையும் பறித்து எறிந்து விட்டனர்.
இது தொடர்பாக எனது கணவர் பந்தல்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த சப்–இன்ஸ்பெக்டர் சண்முகராஜியிடம் தன்னை தாக்கிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்த எனது கணவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவர்கள் தப்பி செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்துள்ளார். எனது கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அன்றே இரவே இது பற்றி தகவல் தெரிந்த எனது கணவரின் சகோதரர் போஸ் பந்தல்குடி போலீஸ் நிலையம் சென்று எனது கணவரை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சப்–இன்ஸ்பெக்டர் சண்முகராஜ், அவரை அவமரியாதை செய்து வெளியே அனுப்பிவிட்டார்.
பின்னர் எனது கணவரை தாக்கியவர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் லூர்துசாமி, சந்திரகுமார், சுரேஷ் என தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். என் கணவரின் சகோதரர் அவரது போலீஸ் எண் 100 மூலம் அழுத்தம் கொடுத்ததன் பேரில் பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பணிக்கு சென்ற எனது கணவரை தாக்கி படுகாயப்படுத்திய 3 பேரையும் போலீஸ் அதிகாரிகள் காப்பாற்ற உறுதுணையாக இருந்துள்ளது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. எனவே தாங்கள் விசாரணை நடத்தி என் கணவரை தாக்கிய 3 பேர் மீதும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.