பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரம்: தாயாரை கொலை செய்த மாணவன் கைது


பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரம்: தாயாரை கொலை செய்த மாணவன் கைது
x
தினத்தந்தி 4 Oct 2018 11:45 PM GMT (Updated: 4 Oct 2018 8:32 PM GMT)

பெருமாநல்லூர் அருகே பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் தாயாரை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

பெருமாநல்லூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் தையல்வேலை செய்து வந்தார். இவருடைய கணவர், கருத்துவேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது 2 மகன்களுடன் அந்த பெண் வசித்து வந்தார். இதில் மூத்தமகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 17 வயது உடைய இளைய மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு அந்த பெண்ணின் மூத்த மகன் சேவூர் சென்று விட்டார். இதனால் அந்த பெண்ணும், அவருடைய இளைய மகனும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் சேவூர் சென்று இருந்த மூத்த மகன் நேற்று முன்தினம் காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் திறந்து இருந்தது.

இதையடுத்து கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் மூத்தமகன் சென்றபோது வீட்டினுள் அந்த பெண் படுத்த நிலையில் கிடந்தார். எனவே தனது தாயார் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவருடைய உடம்பு ‘ஜில்’ என்று இருந்துள்ளது. மேலும் அவர் அருகே கயிறு ஒன்றும் கிடந்தது. நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால், மூத்தமகன் கூச்சல் போட தொடங்கினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் கழுத்தில் கயிறு கொண்டு இறுக்கப்பட்டதற்கான தடயமும் இருந்தது.

இதையடுத்து வீட்டில் இருந்த தம்பியை காணாததால் இது குறித்து தகவல் தெரிவிக்க தனது தம்பியின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த பெண் இறந்துவிட்ட தகவல் பரவியதால், பயந்துபோன அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். அவர் அந்த மாணவனை பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவரத்தை அந்த மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் தாயார், அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது. எனவே திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது மாணவனுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மாணவன் தனது தாயாரை பார்த்து “நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய்” என்று கூறியுள்ளான்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவன், வீட்டில் இருந்த கயிற்றால் தயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள கோவிலில் இரவு தங்கி உள்ளான். இதற்கிடையில் ஊர் பொதுமக்களுக்கு நடந்த விவரம் தெரிந்து விட்டதால் பயந்துபோய் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகம் காரணமாக தாயாரை, மாணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story