தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: 2 விசைப்படகுகள் மாயம்; மீனவர்களை தேடும் பணி தீவிரம்


தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: 2 விசைப்படகுகள் மாயம்; மீனவர்களை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 5 Oct 2018 2:12 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலுக்குள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலுக்குள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடியில் நேற்று மதியம் வரை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. குளங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

நேற்று காலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவ–மாணவிகள் சிரமப்பட்டு கல்லூரிகளுக்கு சென்றனர்.

மீனவர்களை தேடும் பணி தீவிரம்

மேலும் பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடியில் சுமார் 245 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு சென்ற படகுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் தருவைகுளத்தில் இருந்துமீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகளை மட்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அந்த படகுகளில் சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உப்பு உற்பத்தி பாதிப்பு

இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் நடப்பு ஆண்டின் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 60 சதவீதம் வரை மட்டுமே உப்பு உற்பத்தி நடந்து உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் தனபால் கூறியதாவது:–

மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்து உள்ளது. இந்த ஆண்டு இடையில் மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 16 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது 60 சதவீதம் உப்பு உற்பத்தி ஆகும். இதனால் ஒரு டன் உப்பு ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் உப்பு விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது. இனி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்செந்தூரில் 30 மி.மீட்டர் மழை

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 28.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் 5 மில்லி மீட்டரும், விளாத்திகுளத்தில் 1 மில்லி மீட்டர், வைப்பாரில் 3 மில்லி மீட்டர், கயத்தாரில் 21 மில்லி மீட்டர், கடம்பூரில் 9 மில்லி மீட்டர், ஓட்டப்பிடாரத்தில் 4 மில்லி மீட்டர், மணியாச்சியில் 20 மில்லி மீட்டர், வேடநத்தத்தில் 5 மில்லி மீட்டர், கீழஅரசடி 4 மில்லி மீட்டர், சாத்தான்குளம் 5.4 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 2 மில்லி மீட்டர், தூத்துக்குடி 9.5 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.


Next Story