ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி; 2 பேர் படுகாயம்


ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Oct 2018 3:30 AM IST (Updated: 6 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கடை அருகே மஞ்சாலுமூடு புத்தன் வீடு கடையறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலாளி. இவருடைய மனைவி அஜிதா. இவர்களுக்கு அனு எஸ்.ராஜ்(வயது 21) , அருண் எஸ்.ராஜ் (19) ஆகிய 2 மகன்கள். இதில் அருண் எஸ்.ராஜ், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவருடைய நண்பர், ராமன்துறை 3-வது அன்பியத்தை சேர்ந்த பிரதீப் (19).

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அருண் எஸ்.ராஜ் தனது மோட்டார்சைக்கிளில், பிரதீப்பை அழைத்துக்கொண்டு தேங்காப்பட்டணத்தில் இருந்து வெட்டுமணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள், புதுக்கடை மின்வாரிய அலுவலகம் அருகே செல்லும் போது, எதிரே மெதுகும்மல் பகுதியை சேர்ந்த அனீஷ்குமார் என்பவர் ஆட்டோ ஓட்டிவந்தார். ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அருண் எஸ்.ராஜ், பிரதீப், ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் அனீஷ்குமாரும் படுகாயம் அடைந்தார்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அருண் எஸ்.ராஜ், அனீஷ்குமார் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் எஸ்.ராஜ் பரிதாபமாக இறந்தார். பிரதீப்பை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story