நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆற்றில் 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர்,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வருகிறது. அதனால் அந்த அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பவானிசாகர் பகுதியிலும் தினமும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் 4 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 100.74 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்றும் அதிகரித்தது. மாலை 6 மணி அளவில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்மட்டம் 101 அடியை எட்டியது.
பவானிசாகர் அணையில் 102 அடி வரை தான் தண்ணீரை தேக்க முடியும். எனவே இரவு 7 மணி அளவில் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.