மர்மச்சாவில் திடீர் திருப்பம்: முன்விரோதத்தில் வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 5 பேர் கைது


மர்மச்சாவில் திடீர் திருப்பம்: முன்விரோதத்தில் வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மர்மச்சாவில் திடீர் திருப்பமாக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாலசந்திரன் (வயது 28). தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி அந்தேவனப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மது போதையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஆனாலும் மயக்கம் தெளியாததால் அவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்ரே செய்து பார்த்த போது அவரை தலையில் பலமாக தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலசந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக அவரது தந்தை முருகன் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மர்மச்சாவில் திடீர் திருப்பமாக முன்விரோதத்தில் பாலசந்திரனின் நண்பர்கள் அந்தேவனப்பள்ளியைச் சேர்ந்த பிரதீப்குமார் (26), கெம்பன் என்கிற சுரேஷ் (28), அம்பரீஷ் என்கிற அமரேசன் (22), பிரவீன்குமார் (28), கிருஷ்ணமூர்த்தி (28) ஆகிய 5 பேரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், 2-ந் தேதி அந்தேவனப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மது போதையில் மயங்கி இருந்த பாலச்சந்திரனை, பிரதீப்குமார் உள்ளிட்ட 5 பேரும் உருட்டு கட்டையாலும், கல்லாலும் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைதான 5 பேரையும் போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story