சான்றிதழ் வழங்குவதில் வாரிசுதாரர்களை அடையாளம் காண்பது சிரமம் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சான்றுகள் வழங்குவதில் வாரிசுதாரர்களை அடையாளம் காண்பதில் சிரமம் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பாதாவது:–
எனது 6 வயதில் தந்தை இறந்தார். அப்போது எனது தம்பி கணேசன் 10 மாத குழந்தையாக இருந்தான். எங்களது பெற்றோருக்கு நாங்கள் மட்டுமே. எங்கள் தாயை தவிர வேறு எந்த வாரிசுகளும் இல்லை. எனது தாயார் லட்சுமியம்மாள் கடந்த 2008–ல் இறக்கும் வரை என்னுடன் தான் இருந்தார். மாற்றுத்திறனாளியான என் தம்பியின் இடது கால் செயல்பாடு இல்லாததால் அவரால் தனித்து எந்த பணியும் செய்ய முடியாது. இருவரும் ஒரே வீட்டில் வசித்தோம். இந்த நிலையில் கடந்த ஆண்டு என் தம்பி இறந்து விட்டார். இறக்கும் வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கென தனியாக வாரிசுதாரர்கள் இல்லை.
நான் மட்டுமே அவருக்கு வாரிசாக உள்ளேன். என் தம்பி உயிருடன் இருந்த காலத்தில் நாங்கள் வாங்கிய நிலத்தை கூட்டாக பதிவு செய்துள்ளோம். எனவே, இறந்த என் தம்பிக்கு நான் மட்டுமே வாரிசாக இருப்பதால் வாரிசு சான்று கேட்டு திண்டுக்கல் கிழக்கு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். வருவாய் ஆய்வாளரின் அறிக்கைப்படி, இறந்த என் தம்பிக்கு நான் நேரடி வாரிசுதாரர் இல்லையென கூறி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் மகாராஜன் ஆஜரானார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
இதுபோன்ற வழக்குகளில் வருவாய் துறையினரே இரண்டாம் நிலையிலுள்ள வாரிசுதாரர்களுக்கு சான்று வழங்கலாம். வருவாய்த்துறையில் கடைநிலை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ளவர்களின் விவரங்களை நன்கு அறிந்திருப்பர். வி.ஏ.ஓ. உள்ளிட்டோர் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் நன்கு அறிவர். அவரது உறவு முறைகளையும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் நன்கு கண்காணித்த பிறகே அரசுக்கு தகவல்களை கொடுக்கின்றனர். இரண்டாம் நிலையிலுள்ள வாரிசுதாரர்களுக்கு சான்று வழங்கும்போது, முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களின் பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வழங்கலாம்.
பின்னாளில் ஏதேனும் தவறு நடந்துள்ளதாக தெரிந்தால் வழங்கப்பட்ட சான்றை ரத்து செய்து, உரிய கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். வாரிசுதாரர்களை அடையாளம் காண்பதில் சிரமம் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரிக்க தேவையில்லை. எனவே, மனுதாரருக்கு வாரிசு சான்று வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் உள்ளிட்ட வேறு யாரேனும் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் இருந்தால் அவர்களுக்கு 3 வாரத்திற்குள் வாரிசு சான்று வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.