அனுமதியின்றி 338 பெட்டிகளில் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்; 5 பேர் கைது


அனுமதியின்றி 338 பெட்டிகளில் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:13 AM IST (Updated: 7 Oct 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி கட்டிடங்கள் மற்றும் தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 338 பெட்டிகளில் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் வெளியூர் வியாபாரிகளை குறிவைத்து பட்டாசு கடைகளில் அதிக அளவில் பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்டாசு கடைகளில் பட்டாசுகளை இருப்பு வைக்கும்போது அரசு விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு ஏற்படுவதால் பட்டாசு கடைகளில் அதிக அளவில் பட்டாசுகளை இருப்பு வைக்க முடியாது. அதனால் பட்டாசு கடைகள் அருகே உள்ள கட்டிடங்களில் சிலர் பட்டாசுகளை பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அனுமதியின்றி கட்டிடங்களில் மற்றும் தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைக்கும் நபர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போது திருத்தங்கல்–ஆலமரத்துப்பட்டி ரோட்டில் அனுமதி பெறாமல் 37 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக சத்தீஸ்வரன்(வயது 37) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் சிவகாசி–திருத்தங்கல் மெயின்ரோட்டில் அனுமதியின்றி கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து சுப்பிரமணியன்(52) என்பவரை கைது செய்தனர். மேலும் சிவகாசி–விருதுநகர் பைபாஸ் ரோட்டில் ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் செந்தில்குமார்(34) என்பவரை கைது செய்தனர். அதேபகுதியில் தகர செட்டில் 17 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கனிராஜ்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபகுதியில் அனுமதி பெறாமல் கட்டிடத்தில் 97 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து வினோத்(32) என்பவரை கைது செய்தனர்.

போலீசாரின் சோதனையில், அனுமதியின்றி மொத்தம் 338 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story