தேவதானப்பட்டி அருகே என்ஜினீயரை கொலை செய்த மனைவி–கள்ளக்காதலன் கைது


தேவதானப்பட்டி அருகே என்ஜினீயரை கொலை செய்த மனைவி–கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் என்ஜினீயரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில், பட்டறைப்பாறை என்னுமிடத்தில் கடந்த 18–ந்தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் உடலை கைப்பற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் மங்களூர் ஜே.எம்.ரோடு காஞ்சிபட்டா பாலக்காபாடியை சேர்ந்த முகமது சமீர் (வயது 30) என்றும், அரபு நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவருடைய மனைவி பிரதோஸ். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ‘மங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது சமீர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் மனைவி பிரதோஸ், குழந்தையுடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கார் டிரைவர் முகமது யாசிக் அவர்களை அழைத்து சென்றுள்ளார். அப்போது பிரதோஸ் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காரில் ஏற்றி கொடைக்கானலில் மலைப்பகுதியில் வீசி சென்றது’ தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதோஸ், கள்ளக்காதலனுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெங்களூரு கப்பன்பார்க் பகுதியில் அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

முகமது சபீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார். இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிரதோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார். டிரைவர் முகமது யாசிப்பின் சித்தி வீடு இருந்தது. அதன் மூலம் முகமது யாசிக்கும், அவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பிரதோசின் தந்தை ஜாசத் உசேன் கண்டித்துள்ளர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13–ந் தேதி முகமது சபீர் சொந்த ஊருக்கு வந்தார். 15–ந் தேதி காரில் அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். காரை முகமது யாசிப்பின் ஓட்டினார். அப்போது முகமது சபீரை கொலை செய்ய பிரதோஸ், முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அவரை இறந்து விட்டதாக நினைத்து, காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து, கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர். அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அது முடியாமல் போகவே, கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர். அப்போது ஒசூர் அருகே வந்தபோது குழந்தை அழுகும் சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார். பின்னர் கடந்த மாதம் 15–ந் தேதி கொடைக்கானல் மலைப்பாதையில் பட்டறைப்பாறை அருகே வைத்து இருவரும் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பிரதோசிடம் முகமது சமீர் தம்பி அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளார். அங்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தையை வீட்டில் விட்டு, 60 பவுன் நகையை எடுத்து கொண்டு பிரதோஸ், முகமது யாசிப்புடன் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். பின்னர் பெங்களூருவுக்கு வந்த போது போலீசில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும்போது தடயம் இல்லாமல் இருப்பதற்காக சுங்கச்சாவடிகள் கேமராவில் காரின் பதிவு எண் பதிவாகமல் இருப்பதற்கு மாற்று வழியில் முகமது யாசிப் வந்துள்ளார். ஆனால் கொடைக்கானலில் இருந்து மீண்டும் பெங்களூரு செல்லும் போது சுங்கச்சாவடிகளை கடந்து சென்றுள்ளனர். அதில் கேமராவில் அவர்கள் முகமது யாசிக்கின் கார் எண் பதிவாகியது. அதனை போலீசார் துருப்பு சீட்டாக அமைந்தது. அதன் மூலம் அவர்கள் சிக்கி கொண்டனர்.


Next Story