டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் அருகே வாங்கல் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிப்பு குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்ட பணிகள் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு 3 வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று ஒருவர் (செந்தில்பாலாஜி) சொல்லிக் கொண்டிருக்கிறார். அரவக்குறிச்சி தொகுதியில் விரைவில் அமைக்க உள்ள புகளூர் கதவணை உள்ளிட்ட திட்டங்கள் அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் இருக்கும். முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் யாருடைய மேற்பார்வையின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை விசாரணை ஆணையம் பார்த்து கொள்ளும்.

சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் கோவையில் 100 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மத்திய அரசின் மானியத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மானியம் கிடைத்தவுடன் நிதி ஒதுக்கி பஸ்கள் வாங்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் அந்த பஸ்சில் புகுத்தப்படுவதால் ரூ.2 கோடியாக இருந்த மின்சார பஸ்சின் விலை ரூ.1½ கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

எதிர்காலத்தில் காற்று, ஒலி மாசுவை தடுக்க இது போன்ற மின்சார வாகனங்கள் அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது. கரூர் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வாகனங்களை இயக்கி காண்பிக்க நவீன டிஜிட்டல் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளதை போல் இன்னும் 14 இடங்களில் அமைக்கப்படும்.

தீபாவளியையொட்டி தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 22 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story