கத்திமுனையில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் பணம் பறிப்பு - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


கத்திமுனையில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் பணம் பறிப்பு - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:39 AM IST (Updated: 8 Oct 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

கத்திமுனையில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் பணம்-மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம்-பெங்களூரு புறவழிச்சாலையில் கத்திமுனையில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் பணம்-மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்தவர் ஜான் (வயது27). இவர் தொழில் சம்பந்தமாக பெங்களூரு சென்றார். பின்னர் கொடைக்கானல் செல்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். சேலம்-பெங்களூரு புறவழிச்சாலையில் சேலம் ஸ்டேட் பாங்க் காலனி அருகே சென்ற போது காரை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் சிறுநீர் கழித்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தி முனையில் அவர் வைத்து இருந்த செல்போனை பறித்துக்கொண்டது.

பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் கருப்பூர் அருகே சென்றது. அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணுவை தடுத்து நிறுத்தியது. அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபட்டை பறித்து சென்றது. பின்னர் அந்த வழியாக வந்த மற்ற 2 பேரை மிரட்டி அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர். பின்னர் ஓமலூர் அருகே சென்ற கும்பல் அந்த பகுதியை சேர்ந்த மோகன்குமார், பச்சியண்ணன் ஆகிய 2 பேரை தாக்கி அவர்களிடம் இருந்து பணம், மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இது குறித்து செல்லக்கண்ணு போலீஸ் கட்டுப்பாட்டு அறை, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் செல்லகண்ணுவின் மொபட் ஓமலூர் அருகே உள்ள முட்புதரில் கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

சேலம்-பெங்களூரு புற வழிச்சாலையில் இரவு-பகல் என அனைத்து நேரங்களிலும் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது.

இதனிடையே சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் நேற்று காலை, குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் மோகன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், குமார், கண்ணன், செந்தில் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஆகியோரை நேரில் வரவழைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது இரவுப்பணியில் சரிவர ரோந்து பணியில் ஈடுபடாத போலீசார் சிலரை, கமிஷனர் சங்கர் எச்சரித்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.


Next Story