பெங்களூரு நகர மாவட்டத்தில் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு


பெங்களூரு நகர மாவட்டத்தில் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:41 PM GMT (Updated: 7 Oct 2018 11:41 PM GMT)

பெங்களூரு நகர மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி சீனிவாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக பன்றி காய்ச்சல் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை குறித்து தினமும் மாலை 4 மணிக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். பெங்களூரு நகர மாவட்டத்தில் இதுவரை 46 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.புரத்தில் அதிக பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் வெளியூர்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். அங்கு மட்டும் 9 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது.

இந்த நோய் தாக்கியவர்கள் பயப்பட தேவை இல்லை. அதற்கு தேவையான மருந்துகள் உள்ளன.

இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.

Next Story