களக்காடு அருகே: கட்டிட தொழிலாளி குத்திக்கொலை-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
களக்காடு அருகே கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் நடுக்கல்லடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா நாடார். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து, மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் பிரபாகரனுக்கும், அங்குள்ள வடக்கு தெருவை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று மாலையில் பிரபாகரன் வடக்கு தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தவர்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், ஸ்குருடிரைவரால் பிரபாகரனின் நெஞ்சில் குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்குமார், களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், லிபி பால்ராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் பிரபாகரன் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். களக்காடு அருகே கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story