சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளி


சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 8 Oct 2018 7:37 PM GMT)

சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம்.

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூர் அம்பலக்காரர் தெருவில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 42). இவரது மனைவி அழகம்மாள்(35). இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு செல்வம்(13), லட்சுமணன்(10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

ராமசாமி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து அழகம்மாளுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராமசாமி, தன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட சண்டை முற்றியதில் ராமசாமி, குடிபோதையில் அழகம்மாளின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அழகம்மாளின் தாயார் பட்டம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தன் மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சுவாமிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி அய்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அழகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராமசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story