சினிமாவில் நடக்கும் பிரச்சினை உடனே மக்களை சென்று விடுகிறது - நடிகை சமந்தா பேச்சு
“சினிமாவில் நடக்கும் பிரச்சினை உடனே மக்களை சென்று விடுகிறது“ என்று மதுரையில் நேற்று நடந்த செல்போன் கடை திறப்பு விழாவில் நடிகை சமந்தா கூறினார்.
மதுரை,
தென் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் பிக் சி செல்போன் நிறுவனம் தற்போது மதுரையில் 3 கடைகளை திறந்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ள திரைப்பட நடிகை சமந்தா காளவாசல் பகுதியில் உள்ள பிக் சி செல்போன் நிறுவன கடையை திறந்து வைத்தார். இதில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலு, ரவிசந்திரன், ஸ்வப்னா, பாலாஜி, கவுதம், கைலாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடிகை சமந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்னணியில் உள்ள பிக் சி செல்போன் நிறுவனம் தமிழகத்தில் மதுரையில் தங்களது கடைகளை திறந்துள்ளது. அந்த நிறுவனம் 16 ஆண்டுகளில் 225–க்கும் மேற்பட்ட கடைகளை திறந்து உள்ளது. அந்த நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த எனக்கு மதுரை மக்கள் நன்கு வரவேற்பு கொடுத்தனர். மதுரை மக்களுக்கு ஏற்றார் போல் தரம் வாய்ந்த முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் பிராண்டுகள் குறைந்த விலையில் அளிக்கப்படும்.
திரைப்படத்துறையில் இருந்து தற்போது பல்வேறு நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வந்து கருத்துக்கள் கூறுவது குறித்து, நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கு அதுபோன்ற எந்த அனுபவமும் கிடையாது. கடந்த 10 ஆண்டு காலமாக திரைப்படத்துறையில் இருந்து வருகிறேன். சினிமா நடிகரை தான் திருமணம் செய்து கொண்டேன்.
பிற துறைகளில் உள்ளது போன்று சினிமா துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவர்கள் செய்யும் சில தவறுகள் சினிமா துறை என்பதால் உடனடியாக மக்களிடம் சென்றுவிடுகிறது. அது குறித்த பிரச்சினைகளும் பூதாகரமாகிவிடுகின்றன. ஆனால் சினிமா துறையில் எனக்கு இதுவரை அது போன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்ததில்லை.
குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்குள்ளும் ஆசை உண்டு. ஆகையால் தற்போது அப்படியொரு வாய்ப்பிற்காக எனது பட வாய்ப்புகளைப் பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு நான் நடிக்கும் படங்கள் குறைவு என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. ஆனால் இந்தாண்டு மட்டும் 5 படங்களில் நடித்து உள்ளேன்.
மதுரையில் உள்ள எனது ரசிகர்கள் என் மீது அன்பும், பரிவும் கொண்டவர்கள். ஆகையால் அவர்களோடு இன்று உரையாடவிருக்கிறேன். ரசிகர்களால் தான் இந்த அளவிற்கு நான் உயர்ந்துள்ளேன்‘.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து நடிகை சந்தாவிடம் கேட்டபோது, அது குறித்து பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.