மதுரையில் கஞ்சா வியாபாரி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், பெண் உள்பட 3 பேர் சிக்கினர்
மதுரையில் கஞ்சா வியாபாரி வீட்டில் 3 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை,
மதுரை முனிச்சாலை வைகை ஆற்றின் தென்கரையில் உள்ளது பிரபல கஞ்சா வியாபாரி பெருமாயியின் வீடு. அவரது வீட்டிற்கு நேற்று மதியம் போலீஸ் கமிஷனரின் தனிப்படை போலீசார் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் டிபன் பாக்ஸ்சில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அதனை ஆய்வு செய்த போது, வெங்காய வெடி வகையை சேர்ந்த சாதாரண நாட்டு வெடிகுண்டுகள் என்பதும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையில் தெப்பக்குளம் போலீசார், கோர்ட்டுக்கு சென்று விட்டு காரில் கணவர் காளையனுடன் வந்த கஞ்சா வியாபாரி பெருமாயியை பிடித்து விசாரித்தனர். அதில் தனது தங்கை ஜெயராணியின் தோட்டம் கோடங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தின் கீழ் உள்ளது. இங்கு கிழங்கு வகைகளை பயிரிடும் போது காட்டு பன்றிகள் அதனை சேதப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தேவைப்படுவதாக தங்கை மகன் கேட்டார். அதன்பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி அவர்களிடம் கொடுப்பதற்காக வைத்துள்ளதாகவும், வேறு காரணத்திற்காக அதனை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர் பெருமாயி, அவரது கணவர் காளை என்ற காளையன், கார் டிரைவர் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பெருமாயியின் தங்கை ஜெயராணி, அவரது மகன் பிரதீப் மற்றும் இளவரசன் ஆகியோரை பிடிக்க போலீசார் கோடங்கிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்த பின்னரே உண்மையான காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.