நாகர்கோவில்: தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில்: தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 11:15 PM GMT (Updated: 8 Oct 2018 9:54 PM GMT)

தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தன்னாட்சி கல்லூரிகளில் சான்றிதழுக்காக உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

வருகைப்பதிவு குறைவுக்காக அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம், வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெசின் முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க கொடிகளை மாணவ- மாணவிகள் பலர் கைகளில் பிடித்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

பின்னர் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெசின் கூறியதாவது:-

மாணவர்களாகிய நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமோ, அரசோ எங்களை அழைத்து இதுவரை பேசவில்லை. எனவே நாளை (அதாவது இன்று) நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 15 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் குமரி மாவட்டத்தில் இருந்து செல்ல இருக்கிறோம் என்று ஜெசின் கூறினார்.


Next Story