பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை - பொதுமக்கள் கோரிக்கை


பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை -  பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2018 11:02 PM GMT (Updated: 8 Oct 2018 11:02 PM GMT)

பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, ரேஷன் கார்டு, கடனுதவி, நிதியுதவி, பொதுநல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 404 மனுக்கள் பெறப்பட்டன.

வாலாஜா தாலுகா சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் மற்றும் சிறு குறு தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில், பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை அமைப்பதற்காக சுங்கச்சாவடி பகுதியில் இருபுறங்களிலும் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுடைய வாழ்வாதாரமே நிலங்களும், வீடுகளும் தான். எனவே அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை போல், எங்கள் பகுதியில் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் எங்களின் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் அனைவருக்கும் வேறு இடத்தில் அரசு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

பரதராமி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். பரதராமி ஏரி மழைக்காலங்களில் நிரம்பி அதன் உபரிநீர் நீர்வரத்துக் கால்வாய் வழியாக வளையாத்தூர் ஏரிக்குச் செல்லும். வளையாத்தூர் ஏரி அருகே கிராம மக்களின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர், அங்குள்ள விவசாய நிலத்தை வாங்கி ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் சில இடங்களில் கால்வாயை சேதப்படுத்தி உள்ளனர். அதனால் பரதராமி ஏரியில் இருந்து வளையாத்தூர் ஏரிக்கு உபரிநீர் செல்ல வழியில்லை. எனவே விவசாய நிலத்துக்குத் தண்ணீர் இல்லை. நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியிருந்தனர்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், நவீன சக்கர நாற்காலி மற்றும் 11 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் என 14 பேருக்கு ரூ.67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பேபி இந்திரா, உதவி இயக்குனர் (நில அளவை) கண்ணபிரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையாக மனுக்கள்


ஆம்பூர் தாலுகா கண்ணாடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிட காலனியில் வசிக்கும் 60 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 36 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க அதிகாரிகள் பணம் கேட்கின்றனர். இலவச வீட்டுமனை பட்டா வழங்க இதுவரை 192 முறை மனு கொடுத்தும் பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story