அருப்புக்கோட்டை அருகே சாலை வசதி கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அருப்புக்கோட்டை அருகே சாலை வசதி கேட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் மதுரை–தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தக் கல்லூரி 4 வழிச்சாலையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. மணல் சாலைதான் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேதமாகி சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தச் சாலையை தார்ச்சாலையாக மாற்றக் கோரி நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் மதுரை– தூத்துக்குடி 4 வழிச்சாலையின் ஓரத்தில் ஒன்றுகூடி அமர்ந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் அழகுசெல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் 10 தினங்களில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.