கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்


கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 5:30 AM IST (Updated: 9 Oct 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கு கைதி அங்குள்ள கழிவறை ஜன்னல் வழியாக தப்பி ஓடினார்.

கோவை,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புள்ளப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 34). இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி கோவை கோல்டுவின்ஸ் தச்சன் நகரை சேர்ந்த நர்சு சந்தியா என்பவரை கொலை செய்த வழக்கில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு கோர்ட்டு 10 வருடம் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி செல்வராஜ் திடீரென்று சிறையில் உள்ள அறையில் கொசுவர்த்தி சுருளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 7-ந் தேதி திடீரென்று அவர் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டார். இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு பாதுகாப்பாக போலீஸ்காரர் சரவணகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் கழிவறை செல்ல வேண்டும் என்று செல்வராஜ் கூறினார். இதையடுத்து அந்த போலீஸ்காரர் அங்கிருந்த கழிவறைக்கு செல்வராஜை அழைத்துச்சென்றார். உள்ளே சென்று பல நிமிடங்கள் கழித்த பின்னரும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

உடனே அந்த போலீஸ்காரர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அந்த கழிவறை ஜன்னலில் போடப்பட்டு இருந்த கண்ணாடிகள் மற்றும் கொசுவலை அகற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. கழிவறைக்குள் சென்ற செல்வராஜ், ஜன்னலில் இருந்த சிறிய அளவிலான கண்ணாடிகள், கொசுவலையை அகற்றிவிட்டு அதன் வழியாக வெளியே குதித்து தப்பிச்சென்றது தெரியவந்தது.



இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தப்பிச்சென்ற செல்வராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்வராஜ் தப்பித்து சென்றது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மனைவிக்கும், ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சிறையில் இருந்த அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் சொத்துக்களை விற்று, பணத்தை ஆடம்பரமாக அவரது மனைவி செலவு செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், தனது மனைவியை கொலைசெய்வேன் என்று அடிக்கடி கூறிவந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவரை கொலை செய்வதற்காகதான், திட்டம் தீட்டி தற்கொலை செய்வதுபோன்று கொசுவர்த்தி சுருளை தின்றும், மணிக் கட்டை அறுத்தும் உள்ளார்.இதனால் தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவோம்.அப்போது தப்பி சென்று விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணகுமாரை, பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story