தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்


தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:00 PM GMT (Updated: 9 Oct 2018 7:39 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்கிருந்து 300-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். அதேபோல 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் மூலமாகவும் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.

கடல் வளம் குறைந்து விட்ட நிலையில் டீசல் விலை உயர்ந்து வருவதால் மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் டீசல் விலையை குறைக்க வேண்டும். விசைப்படகுகளுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் கடந்த 3-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள், மீன் வியாபாரிகள் என 30 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள், கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் ஏலக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Next Story