மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 11 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசனாகும். இந்த மாதங்களில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், காரைக்கால் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேதாரண்யம் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

விலை அதிகமாக போகக்கூடிய மயில் மீன், வாவல், திருக்கை உள்ளிட்ட மீன்களும், புள்ளி நண்டு, கல் நண்டு, நீலக்கால் நண்டும் இந்த சீசனில் மீனவர்களின் வலையில் அதிகளவு பிடிபடும். அதேபோல சந்தைகளில் மவுசு மிக்க சிங்கி இறால்களும் அதிகளவில் கிடைக்கும். இதன் காரணமாக மீனவர்கள் இந்த சீசனை தவற விடமாட்டார்கள்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு மீன்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதும் இந்த சீசனில் தான். இதனால் நாள்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை மீன் வர்த்தகம் நடக்கும். இந்த நிலையில் டீசல் விலையை குறைக்க வேண்டும். விசைப்படகு மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கே டீசலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 8-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.

வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை ரூ.10 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் கூறுகிறார்கள். இதனிடையே வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை, ஆற்றின் முகத்துவார பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story