வால்பாறை அருகே முடீஸ் தபால் நிலையத்தில் திருட முயற்சி; தடுக்க முயன்ற அதிகாரியை தாக்கிவிட்டு கொள்ளையன் ஓட்டம்


வால்பாறை அருகே முடீஸ் தபால் நிலையத்தில் திருட முயற்சி; தடுக்க முயன்ற அதிகாரியை தாக்கிவிட்டு கொள்ளையன் ஓட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 11 Oct 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே முடீஸ் தபால் நிலையத்தில் திருட முயற்சி நடந்தது. இதை தடுத்த அதிகாரியை கொள்ளையனை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

வால்பாறை,

வால்பாறை அருகே முடீஸ் துணை தபால் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி (வயது 38). இவரது வீடு தபால் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வீட்டுக்குள் இருந்து தபால் நிலையத்துக்கு வருவதற்கு தனியாக வழி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழனிச்சாமி தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் சத்தம் கேட்டு அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது தபால் நிலையத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவர் பணம் இருந்த இரும்பு பெட்டியை உடைத்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி அவரை பிடித்தார். இதையடுத்து அந்த மர்ம நபர் பழனிச்சாமியிடம் இருந்து தப்பிக்க அவரை தாக்கினார். இதில் இருவரும் கண்டித்துப்புரண்டு சண்டை போட்டனர்.

அப்போது அந்த மர்ம நபர் அங்கிருந்த நாற்காலியை எடுத்த பழனிச்சாமியின் தலையில் தாக்கினார். இதில் பழனிச்சாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் விடாமல் பழனிசாமி அந்த மர்ம நபரை தாக்கினார். இதில் அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது. திருடன் தப்பி சென்றுவிடாமல் இருக்க பழனிசாமி நீண்ட நேரம் போராடினார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த மர்ம நபர் பழனிச்சாமியை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்த கழிவறை ஜன்னல் வழியாக தப்பி ஓடினார்.

இதுகுறித்து பழனிச்சாமி அக்கம் பக்கத்தினர் மற்றும் தபால் நிலைய பணியாளர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முடீஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் தபால் நிலைய பணியாளர்கள் வால்பாறை பஸ் நிலையம் அருகே சென்ற பார்த்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். தபால் நிலைய பணியாளர்களை பார்த்ததும் அந்த நபர் கையில் வைத்து இருந்த பையை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த பையை எடுத்து பணியாளர்கள் முடீஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து முடீஸ் போலீஸ் நிலையத்தில் பழனிச்சாமி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், திருட வந்த நபர் இந்தியில் மொழி பேசியதாக தெரிவித்துள்ளனர். எனவே திருட வந்த ஆசாமி வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் முடீஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் தபால் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தபால் அதிகாரி சண்டை போட்டு திருட்டு முயற்சியை தடுத்ததால் தபால் நிலையத்தில் இருந்த ரூ.5 லட்சம் தப்பியது. பலத்த காயமடைந்த பழனிச்சாமி வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story