சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2018 4:30 AM IST (Updated: 11 Oct 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம், பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப சேவா சங்கம், ஆர்.எஸ்.எஸ்., தெய்வீக இந்து பக்தர்கள் பேரவை உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஊட்டி– குன்னூர் சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு பா.ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட முன்னாள் தலைவர் ராமன் தலைமை தாங்கினார். அதில் கலந்துகொண்டவர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர். இதேபோல் ஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். இதில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்னூரில் லெவல் கிராசிங், பெட்போர்டு சர்க்கிள், சிம்ஸ் பூங்கா, எடப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி, மரப்பாலம், ஊட்டி சாலையில் உள்ள பிளாக் பிரிட்ஜ் ஆகிய இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் தடையை மீறி ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட முயன்ற 69 பேரை கைது செய்தனர்.

கோத்தகிரியில் பஸ் நிலையம், மார்க்கெட் திடல், ராம்சந்த் சதுக்கம், டானிங்டன், கட்டபெட்டு ஆகிய பகுதிகளில் இந்து அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராம்சந்த் சதுக்கத்தில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி ஜெகன் தலைமையிலும், மார்க்கெட் திடலில் இந்து முன்னணியின் நகர தலைவர் நளி தலைமையிலும், பஸ் நிலையத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் தலைமையிலும், கட்டபெட்டு பஜாரில் இந்து முன்னணி பொதுச்செயலாளர் ராஜூ தலைமையிலும் சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று பந்தலூர், தேவாலா உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சாலை மறியலில் 280 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story