‘ஒகி’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


‘ஒகி’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 3:30 AM IST (Updated: 11 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புனித ஹெலன்ஸ் ஆலய பங்குத்தந்தை அன்பரசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒகி புயலில் சிக்கி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளானது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 8.12.2017 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நானும் கலந்து கொண்டேன்.

ஆனால் நாங்கள் சட்டவிரோதமாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் 103 பேர் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்து குழித்துறை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கேட்டுத்தான் போராடினோம். எனவே கோர்ட்டில் நடந்து வரும் எங்கள் மீதான வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். முடிவில், மனுதாரர் உள்பட 103 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக போடப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story