18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அரசு சார்பில் வழங்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது:–
எனக்கு வயது 18 ஆகிறது. தற்போது நான் பி.ஏ. ஆங்கிலம் 2–ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் ஷோபாவை பிரசவத்துக்காக குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது நான் பிறந்துள்ளேன். அந்த சமயத்தில் எனது தாயாருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி, அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
கடந்த 18 ஆண்டுகளாக அவர் கோமா நிலையிலேயே உள்ளார். எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்டார். நானும் எனது தாயாரும் வாழ வழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம்.
அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சைக்காக இழப்பீடும், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனது தாயாருக்கான மருத்துவ சிகிச்சைக்கும், எனது படிப்புக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற எனது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவி கூறிய பிரச்சினை குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீன் தலைமையிலான டாக்டர்கள் குழு, ஷோபாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கலாமா? சிகிச்சை பலன் அளிக்குமா? இயல்புநிலைக்கு வருவாரா? என்பது குறித்து பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் ‘ஷோபாவை பரிசோதனை செய்ததில் அவருக்கு சிகிச்சை அளித்தாலும் இயல்பு நிலைக்கு வரமாட்டார்’ என்று டாக்டர்கள் குழு ஐகோர்ட்டில் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஷோபாவின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மாதந்தோறும் மேலும் ரூ.5 ஆயிரத்தை அரசு சார்பில் குமரி மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.