விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மூடப்படுமா?


விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மூடப்படுமா?
x
தினத்தந்தி 13 Oct 2018 4:30 AM IST (Updated: 13 Oct 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

திருச்சி,

திருச்சி விமான நிலையமானது திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து துபாய் விமானம் பறக்க முயன்றபோது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விமானம் மேலே எழும்பி பறக்கும்போது ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தாழ்வாக பறந்ததால் தான் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்து நடந்த அந்த அபாயகரமான நேரத்தில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பஸ் அல்லது லாரி போன்ற கனரக வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் அந்த வாகனங்கள் மீதும் விமானம் மோதி இருக்க கூடும். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

திருச்சி- புதுக்கோட்டை சாலை மூடப்படுமா? இது தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மூடப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அருகில் இருந்த விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் குமார் எம்.பி. இதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரைவில் 8 ஆயிரத்து 136 அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்யப்பட இருக்கிறது. ஓடுபாதை கிழக்கு பகுதியில் தான் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஓடுபாதை நீட்டிக்கப்பட்டால் விமானம் மேலே பறப்பதற்காக நிர்ணயிக்கப்படும் தூரமும் கிழக்கு பகுதியில் கூடுதலாக தள்ளி போகும். அதனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை. குடியிருப்பு பகுதியில் ஓடுபாதை விரிவாக்கம் செய்வதற்கு மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதனால் தான் கிழக்கு பகுதியில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதுபற்றிய ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story