வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி; 15 பேர் காயம் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு


வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி; 15 பேர் காயம் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 14 Oct 2018 10:45 PM GMT (Updated: 14 Oct 2018 5:46 PM GMT)

வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். மேலும் காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு சீர்வரிசை தட்டுகள் வைத்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி வேனாநல்லூர் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் கார்த்திக், அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி தலைவர் ஜீவா அரங்கநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.


இதில் 200–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350–க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.


காளைகள் முட்டியதில் பிராஞ்சேரியை சேர்ந்த கண்ணன் (வயது 25), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (30), திருச்சியை சேர்ந்த முருகாணந்தம் (31), சதிஷ்குமார் (23), சோழங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34), திருமானூரை சேர்ந்த பாலாஜி (28), கூழாட்டுகுப்பத்தை சேர்ந்த கலியமூர்த்தி (43) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த முருகாணந்தம், சதிஷ்குமார் உள்பட 4 பேரையும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயங்கள், கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், நாற்காலிகள், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஊர்நாட்டார், கணக்கர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story