தனியார் கல்லூரியில் வேலை தருவதாக போலி நியமன ஆணை அனுப்பி மோசடி செய்த பேராசிரியர் கைது


தனியார் கல்லூரியில் வேலை தருவதாக போலி நியமன ஆணை அனுப்பி மோசடி செய்த பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2018 4:45 AM IST (Updated: 15 Oct 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்லூரியில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு, போலி நியமன ஆணை வழங்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 32). கல்லூரி பேராசிரியர். இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக நண்பர்களிடம் கூறினார். கல்லூரியில் லேப் டெக்னீசியன், அலுவலக ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களில் சேர வேலை வாங்கி தருகிறேன் என கூறி மதுரை, தேனி, கம்பம், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.

இதற்காக கல்லூரி தாளாளர் பெயரில் கல்லூரி முத்திரையை பயன்படுத்தி மாணவர்களுக்கு வேலைக்கான நியமன ஆணையை வழங்கி உள்ளார். கல்லூரி தாளாளர் அனுமதியுடன் இந்த உத்தரவு வழங்கப்படுவதாகவும், கடந்த 11–ந்தேதி முதல் பணியில் சேர வேண்டும் எனவும், ஒரு மாதம் தாமதம் ஆகிவிட்டதால் அதற்கான நிலுவை தொகை போனசாக வழங்கப்படும் என்றும் அவரிடம் வேலைக்கு பணம் கொடுத்தவர்களுக்கு இ–மெயில் தகவல் அனுப்பியுள்ளார். இதில் ஒருவர், தனது நியமன உத்தரவு குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்தார். அப்போது கல்லூரியில் வேலைக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை என கூறினர். அதிர்ச்சியடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட பணி நியமன ஆணையை அனுப்பினார். அது போலியானது என்று தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் சரவணகுமார் இதேபோல மேலும் சிலரிடம், கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, குனியமுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணகுமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் சரவணகுமார் எம்.சி.ஏ., எம்.பில், எம்.டெக், எம்.பி.ஏ., பி.எச்டி ஆகிய முதுகலை பட்டங்களை பெற்று மதுரை, கொடைக்கானல், உத்தமபாளையம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் பேராசிரியராக வேலை பார்த்ததும், பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரியவந்தது. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு வந்துள் ளார். ஆனால் வேலைகிடைக்கவில்லை. கல்லூரியில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள முத்திரையை பயன்படுத்தி அதனை போலியாக உருவாக்கி பணம் பறிக்க திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். பணம் சுருட்டும் நோக்கத்தில் போலி மெயில் ஐ.டி. மூலம் பல்வேறு கல்லூரி நிறுவனங்களின் பெயரில் பணி நியமன ஆணை அனுப்ப திட்டமிட்டு முதல் முயற்சியிலேயே போலீசில் சரவணகுமார் மாட்டிக்கொண்டார். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story