பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 7:54 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பனைக்குளம்,

மத்திய அரசின் நிதி உதவியோடு தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நலவாழ்வு மையமாக மேம்படுத்தப்பட்டது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய மந்திரி பேசியதாவது:–

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து மற்றும் மருத்துவமனைகளை முன்னேற்றும் பொருட்டு தமிழகத்தில் பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் ஒன்றியம் மற்றும் உச்சிப்புளி வட்டார சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. உச்சிப்புளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குஉட்பட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் மத்திய அரசு நிதி மூலம் ரூ.55 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு நல வாழ்வு சுகாதார நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் 28 துணை சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்பட்டு துணை நல்வாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.துணை நலவாழ்வு மையங்களில் பிரதமரின் முன்னோடி திட்டமாக கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 24 மணிநேரமும் ஒருங்கிணைந்த நல்வாழ்விற்காக துணை நலவாழ்வு மையங்களில் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

பிரதமரின் மோடி கேர் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்.

தமிழகத்தில் பல்வேறு நல வாழ்வு மையங்களை திறந்து வைத்து ஆய்வு செய்த போதும் மற்ற எந்த நிலையங்களிலும் இல்லாத யோகா மற்றும் சித்தமருத்துவப்பிரிவுகள், அங்கன்வாடி பணியாளர்களின் கண்காட்சிகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சிகள் சிறப்பாக உள்ளன. கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதம், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டாரத்தில் மிகவும் குறைவாக உள்ளது. தாமரைக்குளம் நலவாழ்வு மையம் இந்திய அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story