அம்பத்தூர் நீதிமன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 10–ந்தேதி வக்கீல்கள் சங்க இணை செயலாளர் விஸ்வநாதன், பழைய கட்டிடத்தில் இருந்த அலுவலக பொருட்களை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த மர்மநபர்களிடம் நீங்கள் யார்? என அவர் விசாரித்துள்ளார். ஆனால் அந்த நபர்கள் விஸ்வநாதனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. மேலும், எதிர்தரப்பினரிடம் இருந்து வக்கீல்களுக்கு எதிராக புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் பொற்கொடி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வக்கீல் விஸ்வநாதன் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, அம்பத்தூர் நீதிமன்ற வக்கீல்கள் ஏராளமானோர் நீதிமன்றத்தை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருதலைபட்சமாக செயல்படும் இன்ஸ்பெக்டர் பொற்கொடியை பணி இடமாற்றம் செய்யவேண்டும், வக்கீலை தரக்குறைவாக பேசிய மர்மநபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் வக்கீல்கள் தெரிவித்தனர்.