வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்


வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:30 PM GMT (Updated: 16 Oct 2018 7:14 PM GMT)

வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து முதியவரிடம் மர்மநபர்கள் செல்போனை பறித்தனர். செல்போனை மீட்க போராடிய அவரை மர்மநபர்கள் ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்றனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், நெற்குன்றம், மேட்டுக்குப்பம், புவனேஷ்வரி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன்(வயது 66). இவர் நேற்று முன்தினம் வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த தனது மோட்டார்சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்டனர். திடீரென ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் ஜெயபாண்டியனின் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்தார்.

இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது ஜெயபாண்டியன் செல்போனை மீட்பதற்காக அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதனால் ஸ்கூட்டரை பிடித்துக்கொண்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆனாலும் கொடூர மனம் படைத்த மர்மநபர்கள் ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஜெயபாண்டியனை தரையில் இழுத்தபடி சென்றனர்.

கடைசி வரை போராடியும் ஒன்றும் செய்ய முடியாததால் அவர் ஸ்கூட்டர் மீது வைத்திருந்த பிடியை விட்டார். இதில் ஜெயபாண்டியனுக்கு கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

ஜெயபாண்டியன் மோட்டார்சைக்கிளில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story