குருவித்துறை கோவிலில் கைவரிசை காட்டிய கும்பல் விரைவில் கைது: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பேட்டி


குருவித்துறை கோவிலில் கைவரிசை காட்டிய கும்பல் விரைவில் கைது: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2018 5:15 AM IST (Updated: 17 Oct 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

“குருவித்துறை பெருமாள் கோவிலில் கைவரிசை காட்டிய கும்பலை விரைவில் கைது செய்வோம், கொள்ளை போன சிலைகளை விரைவாக மீட்டது இதுவே முதல்முறை“ என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினார்.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மீட்கப்பட்ட ஒவ்வொரு சிலையும் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் கோவில்களில் சிலை கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சிலைகள் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.

குருவித்துறை பெருமாள் கோவில் சம்பவத்தில் போலீசாரின் கெடுபிடியால்தான் கொள்ளையர்கள் சிலைகளை வீசிச் சென்றுள்ளனர். திருட்டு போன சிலைகள் பழமையானவை. அந்த சிலைகளின் மதிப்பை கண்டறிய சிலைகளின் கைப்பகுதியை கொள்ளையர்கள் வெட்டி, அதன் பாகத்தை எடுத்து சோதித்துள்ளனர்.

குருவித்துறை பெருமாள் கோவிலுக்கு சாதாரண பூட்டை போட்டுள்ளனர். மேலும் அங்கு பொருத்திய கண்காணிப்புக் கேமராக்கள் மிகவும் பழையவை என்பதால் குற்றவாளிகளின் முகங்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

தற்போது இரவிலும் தெளிவாக காட்டும் வகையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் வந்துவிட்டன. அதனை பொருத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்.

சிலைகளை கண்டெடுத்து கொடுத்த விவசாயி கணேசனுக்கு சன்மானம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். காணாமல் போன சிலைகள் விரைவாக மீட்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். சிலைகள் மீட்பு தொடர்பாக விரைவாக செயல்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோரை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story