கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை; பழிவாங்க வந்த கும்பல் மனைவியை வெட்டி சாய்த்தது
மதுரையில் கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,
மதுரை செல்லூர் தத்தனேரியை சேர்ந்தவர் பெரியபாண்டி. இவரது மகன் ஹரிராஜா (வயது 25). பணம் கொடுக்கல்– வாங்கல் மற்றும் ஓட்டல் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியபாண்டி அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இடம் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். அந்த இடத்திற்கு தொடர்பு உடையவர்கள் கூடுதல் பணம் கேட்டு ஹரிராஜாவிடம் தகராறு செய்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு ஹரிராஜா, அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஹரிராஜாவை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியும், தலையில் கல்லை தூக்கிபோட்டும் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக பவுன்ராஜ் (61) என்பவரின் மகன்கள் மாயாண்டி, சசி மற்றும் நிரூபன், முத்துப்பாண்டி, ஹரி, சுகன்பாண்டி உள்பட பலரை செல்லூர் போலீசார் தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த முத்துப்பாண்டி, ஹரி, வினோத், அஜய் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையில் கொலை வழக்கில் மகன்களை போலீசார் தேடி வருவதால் மனவேதனை அடைந்த பவுன்ராஜ், திருமங்கலம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் சோதனை செய்தபோது பவுன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சகோதரர்கள் மாயாண்டி, சசி ஆகியோரை தேடி அவர்கள் வீட்டிற்கு ஹரிராஜா ஆதரவாளர்கள் சென்றனர். இவர்கள், அங்கிருந்து பவுன்ராஜ் மனைவி செல்வியிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாளால் செல்வியை வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.