கவர்னர் கிரண்பெடி மீது புகார்: இயலாமையை மறைக்க நாடகம் போடுகிறார் - நாராயணசாமி மீது பா.ஜனதா தாக்கு


கவர்னர் கிரண்பெடி மீது புகார்: இயலாமையை மறைக்க நாடகம் போடுகிறார் - நாராயணசாமி மீது பா.ஜனதா தாக்கு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:45 PM GMT (Updated: 16 Oct 2018 8:42 PM GMT)

இயலாமையை மறைக்க முதல்–அமைச்சர் நாராயணசாமி நாடகம் போடுவதாக சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் கடந்த சில நாட்களாக சமூக பொறுப்புணர்வு நிதி தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன்கீழ் கவர்னர் சில பணிகளை செய்து வருகிறார். கடந்த 2½ ஆண்டுகளாக முதல்–அமைச்சர் நாராயணசாமி இதை செய்யாதது ஏன்? காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் பணம் பெற்றது காங்கிரஸ்தான்.

கடந்த காலங்களில் தனியார் நிறுவனங்களில் எவ்வளவு நிதி பெறப்பட்டது? அது என்னவானது? இதுதொடர்பாக தனியார் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்தால் தெரியும். சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆட்கள் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் வாங்குகின்றனர். இதற்கு ஆதாரம் உள்ளது.

கவர்னர், முதல்–அமைச்சரின் மோதலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். தனது இயலாமையை மறைக்க மக்களிடையே நாராயணசாமி நாடகம் போடுகிறார். சமூக பொறுப்புணர்வு நிதியை முதல்–அமைச்சரிடம்தான் கொடுக்கவேண்டும் என்று விதியில்லை. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வாகனத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு டீசல் போட்டுள்ளார். அமைச்சர்களின் அலுவலகங்களுக்கான டீ செலவும் அதிகம்.

சபாநாயகர் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிளில் சட்டசபைக்கு வந்தாரம். நாள்தோறும் அவர் இவ்வாறு செய்வாரா? திருமணம், அரசு விழாக்களுக்கு அவ்வாறு செல்வாரா? அவர் சைக்கிளில் வரும் நிலையில் அவருக்கு பின்னால் அவருக்கு வழங்கப்பட்ட அரசு கார் வருகிறது. இதுதான் சிக்கனமா?

பொதுப்பணித்துறையில் குடிநீர் தொட்டி கட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 20 சதவீத பணம் லஞ்சமாக பெறப்படுகிறது. முதல்–அமைச்சர் நிவாரண நிதி காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதையெல்லாம் திசை திருப்ப முதல்–அமைச்சர் நாடகமாடுகிறார். ஆட்சியாளர்களை வருமான வரித்துறை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story