ரெயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க பழைய குற்றவாளிகள் பட்டியல் தயாரிப்பு


ரெயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க பழைய குற்றவாளிகள் பட்டியல் தயாரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 10:45 PM GMT (Updated: 16 Oct 2018 9:53 PM GMT)

காட்பாடியில் ரெயில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க பழைய குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் பயணிகளிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11-ந் தேதி சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில்நிலையம் வந்தது.

பின்னர் ரெயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பிந்துவிடம் இருந்து 5 பவுன் சங்கிலி, ரூ.8 ஆயிரம், நாகேஷ்ராவ் மனைவி மாதவி என்பவரிடம் 3½ பவுன் சங்கிலி, லட்சுமி என்பவரிடம் 4½ பவுன் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு, ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்க ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ராஜகோபால் உத்தரவிட்டார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று வேறு சில ரெயில்களிலும் பயணிகளிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச்சென்றனர்.

இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சம்பவம் நடந்த பகுதியை நேற்றுமுன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் காட்பாடி ரெயில்நிலையம் அருகே உள்ள ‘ஹோம்’ சிக்னலில் ரெயில் மெதுவாக செல்லும்போது கொள்ளையர்கள், பயணிகளிடம் நகைகளை கொள்ளையடித்து செல்கிறார்கள். அந்த இடத்தில் தினமும் இரவு நேரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காட்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் ரெயில் பயணிகளிடம் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. இதில் குற்றவாளிகளை பிடிக்க தமிழகத்தில் ரெயில்கொள்ளையில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவங்களில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளதா என்றும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story