பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறு: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை; நண்பர் கைது


பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறு: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை; நண்பர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே பீடிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

அவினாசி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா ராமியாம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் (36). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் பணியில் கடந்த 17–ந் தேதி இரவு ஈடுபட்டனர்.

அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனை கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் லட்சுமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லட்சுமணனை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகே லட்சுமணன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமணனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சம்பவத்தன்று முருகன், லட்சுமணனும் மது அருந்தி விட்டு வேலை செய்துள்ளனர். அப்போது முருகன், லட்சுமணனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் பீடி இல்லை என்று கூறியதாகவும், இதனால் முருகன், லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கைதான லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பீடி கேட்ட தகராறில் தொழிலாளியை, உடன் வேலை செய்த நண்பரே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story