திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் கருவம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 4–ந் தேதி மதியம் ஆலங்காடு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று அருண்குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.
இதுகுறித்து அருண்குமார் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆலங்காடு பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்போனை பறித்துச்சென்ற ஆசாமிகளின் உருவம் சிக்கியது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று நடராஜா தியேட்டர் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அருண்குமாரிடம் செல்போன் பறித்து சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களை மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நாகராஜன்(19), 15 வேலம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்(19), மடத்துக்குளம் ருத்ராபாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.