மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்


மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 5:33 PM GMT)

மகா புஷ்கர விழாவையொட்டி தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்.

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் தாமிரபரணி ஆற்றில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் தாமிரபரணியில் புனித நீராடி செல்கின்றனர். நேற்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்.

இதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டத்துக்கு வந்தார். அவர் இரவில் அம்பையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 7.30 மணியளவில் பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறைக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு அவர் படித்துறையில் அமர்ந்து மலர்களை தூவி தாமிரபரணிக்கு பூஜை செய்தார். தொடர்ந்து தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடினார். முன்னதாக துணை முதல்-அமைச்சரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.பி., நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான ஏ.கே.சீனிவாசன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், மாநில பேச்சாளர் மீனாட்சி, சிங்கை அருண், அம்பை நகர கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலுக்கு சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பாபநாசம் அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அவரை தாமிரபரணி புஷ்கரம்-2018 கமிட்டி செயலாளர் குமார் என்ற முத்தையா பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் தாமிரபரணி அன்னை மற்றும் அகஸ்தியரை வணங்கினார். அவருக்கு அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமி ஆசி வழங்கினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு சேரன்மாதேவி அருகே உள்ள அத்தாளநல்லூருக்கு சென்றார். அங்கு அவர் ஆதிமூல கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி வணங்கினார்.

இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story